2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பஞ்சம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் வலையமைப்பு (FEWS NET) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் சவாலானதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நகர்ப்புற வேலைவாய்ப்புகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உணவுப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
இந்த அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயராததால், குடும்பங்களின் பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் காரணமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் உணவின் அளவையும், நாளாந்த உணவு வேளைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈர வலய பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்கள், அதேபோல் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் வறிய மக்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்து செலவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கான உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் செப்டம்பர் மாதம் வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான அவசர மனிதாபிமான உணவு உதவித் திட்டங்கள் தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என FEWS NET தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
