விமானப் பயணங்கள் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும் பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பொதிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் தமக்குத் தெரியாமலேயே போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்தும் நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர்கள்கூட கடத்தல்காரர்களால் அறியாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
19 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட சம்பவமொன்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமக்குச் சொந்தமில்லாத பொருட்களை எடுத்துச் செல்ல ஒருபோதும் சம்மதிக்க வேண்டாம் எனவும், இலவச வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வழங்கப்படும்போது அதன் பின்னணி குறித்து கவனமாக சிந்திக்குமாறும் சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு பல நாடுகளில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன எனவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
