அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிபோர்னியாவில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், அதன் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 38 வயதுடைய ஜீனின் ஜோன் டேலே (Jeanine John Taele) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் திணைக்களத்தின் தகவலின்படி, சந்தேகநபர் கோல்ஃப் மைதானத்தைச் சுற்றி புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, சட்டவிரோத தோட்டாக்கள் மற்றும் 16 தோட்டாக்களை ஏற்றக்கூடிய மெகசின் கைப்பற்றப்பட்டதுடன், அவரது வாகனத்திலிருந்தும் மேலும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், எல் செகுண்டோ பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வரும் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடனும் அவர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க ரகசிய பாதுகாப்பு சேவை (US Secret Service) இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
எனினும், ஜனாதிபதி டிரம்பை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
