தனியார் பஸ் சேவை சுமார் 25 முதல் 50 ஆண்டுகள் வரை நாட்டின் போக்குவரத்துத் துறையில் முக்கிய பங்காற்றியுள்ளது. மக்கள் கடந்த அரை நூற்றாண்டாக தனியார் பஸ்களையே நம்பிப் பயணம் செய்துள்ளனர் என்ற உண்மையை மறைத்துவிட்டு, தற்காலத்தில் சிலர் புதிதாகச் சிந்திப்பது போலப் பேசுவது வேடிக்கையானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (5) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் 1978ஆம் ஆண்டு முதல் தனியார் பஸ் சேவை தொடங்கப்பட்டு, சுமார் 25 முதல் 50 ஆண்டுகளாக பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் இந்த தனியார் பஸ்களில்தான் பயணம் செய்து வந்துள்ளனர் என்ற உண்மை பலருக்குத் தெரிந்திருந்தாலும், சிலர் நேற்று பிறந்தது போலப் பேசுவது கவலைக்கிடமான ஒரு நிலைப்பாடாகும்.
கடந்த 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் திறந்த பொருளாதாரம் வந்த பின்னர்தான் தனியார் பஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1977ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் பஸ்கள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சந்தித்தனர். இத்தகைய பின்னணியில்தான் அத்தகைய பொருளாதாரச் சூழலோடு தனியார் சேவை அறிமுகமாகி மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்தது.
ஆனால், தற்பொழுது மெட்ரோ என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நடைமுறையில் அதுவும் இலங்கையின் வழக்கமான பஸ் போக்குவரத்து முறையே தவிர வேறொன்றுமில்லை.
மெட்ரோ பஸ் திட்டம் குறித்துப் பேசுவதற்கோ அல்லது அதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதற்கோ இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். அவ்வாறான ஒரு சூழலே நிலவுகிறது. இந்நிலையில், மக்களை ஏமாற்றும் நோக்கில் மெட்ரோ பஸ்கள் வரப்போவதாகக் கூறித் திசைதிருப்புவது முற்றிலும் தவறான செயலாகும் என குறிப்பிட்டார்.
