யாழ்ப்பாணம் நெடுந்தீவை, காற்றுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ நச்சுப் புகையை வெளியேற்றாத, நாட்டின் முதல் ‘பூஜ்ய உமிழ்வு’ (Zero Emission) சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலா தலமாக உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்தபடி நிலையான சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான கள ஆய்வும், பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலும் அண்மையில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் நெடுந்தீவில் நடைபெற்றது.
நெடுந்தீவு டச்சு ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சின்னங்கள், பல்வேறு தொல்பொருள் பாரம்பரிய இடங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற காட்டுக் குதிரைகள் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றுள்ளது.
இவ்வாறான இயற்கை மற்றும் வரலாற்று செல்வங்கள் காரணமாக, இந்தத் தீவு இலங்கையின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக உருவாகும் திறனை கொண்டுள்ளதாக அரசாங்கம் கருதுகிறது.
கலந்துரையாடலின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, நெடுந்தீவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கட்டாயம் பார்வையிட வேண்டிய இடமாக மாற வேண்டும் என்றார்.
தீவில் அபூர்வமான சுற்றுலா வளங்கள் இருந்தபோதிலும், இதுவரை அது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு போதிய அளவில் பங்களிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தீவின் முழுமையான சுற்றுலா திறனை வெளிக்கொணர, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நெடுந்தீவை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மாற்றுவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர் விநியோகம், சாலை வசதிகள், போக்குவரத்து சேவைகள், தீவிற்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளாக அடையாளம் காணப்பட்டன.
இதனுடன், உள்ளூர் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு சுற்றுலா சேவைகள், விருந்தோம்பல் மற்றும் தொழில்முறை திறன்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சியால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் நேரடியாக நெடுந்தீவு மக்களுக்குச் சென்றடையும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது, என தெரிவித்தார்.
