நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த வருடத்தில் நாடு முழுவதும் 471 விசேட மருந்தக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 362 மருந்தகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளினூடாக 22 இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
காலாவதியான மருந்துகள் விற்பனை செய்தல், நுகர்வோருக்குத் தேவையான தகவல்கள் இல்லாத மருந்துகள் விற்பனை செய்தல், விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், கைப்பற்றப்பட்ட காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், சிரிஞ்ச்கள், கிரீம்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
