2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நடவடிக்கைகளுக்கான சகல பணிகளும் பூர்த்தியாகியுள்ளன.
நாடு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்களும், 326 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்கு 264,496 பாடசாலை பரீட்சாத்திகளும், 107,814 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கமைய இம்முறை 372,310 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களைக் கலந்துரையாடுதல் அல்லது விநியோகித்தல் உட்பட, பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நடவடிக்கைகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ்,முப்படைகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையலம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மின்சார சபை, போக்குவரத்து சேவைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் அவசர கால ஏற்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை வேட்பாளர்களுக்கான அனுமதி அட்டையை அந்தந்த அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட வேட்பாளர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டையில் உள்ள தங்களின் கையொப்பம் சரியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை பரீட்சை நிலையத்திற்கு எடுத்து வருமாறும் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவை அடையாள அட்டை சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அனுமதி அட்டையை இழந்த பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக புதிய பிரதியை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இருப்பினும், தேவையான கையொப்பம் பரீட்சை நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு வினாத்தாளும் காலை அல்லது பிற்பகல் அமர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பது உட்பட, திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணையை கவனமாக சரிபார்த்து, பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னராவது ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்கு வருமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் உயர்தர பரீட்சை என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு போட்டிப்பரீட்சையாகும். ஆகவே பரீட்சாத்திகள் அனைவரும் மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். பரீட்சைகள் சட்டத்துக்கும், நாட்டின் சட்டத்துக்கும் அமைய பரீட்சாத்திகள் செயற்பட வேண்டும்.உயர்தர பரீட்சையை சிறந்த முறையில் நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
