நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும், ‘டித்வா’ பேரிடர் சூழ்நிலையின் கீழும் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள அதிவேகப் பாதை கட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதான வீதி அபிவிருத்தி திட்டங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டங்கள், மற்றும் ‘டித்வா’ பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் செயல்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்களை, முறையாக மாவட்ட மட்டத்தில் செயல்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன் போது ஜனாதிபதி அறிவுறுத்தினார். அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்காக சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த கலந்துரையாடலின் போது மேலும் ஜனாதிபதி தெரிவித்தார்.
