கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில், தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான 3 ஆண்டு விசேட திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் ஜப்பான் சமூக அபிவிருத்தி நிதியம் (JSDF) வழங்கிய 2.73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், அபாயத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இலக்காக வைத்து இந்த ஊட்டச்சத்து திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
மேற்படி 4 மாவட்டங்களிலும் ‘மகப்பேறு மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ ஊட்டச்சத்து சேவைகள் கருத்திட்டத்தை’ அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
