போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மரண தண்டனை தொடர்பில் ஒரு தரப்பினரால் யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானமோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, நீர்கொழும்பு, மஹர, கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 1,500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 61 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் 925 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
