அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும், ஆகையினால் இச்சட்டமூலம் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்அறிக்கை இன்றை வெளியிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுப்பதற்கும், நீதித்துறைக் கட்டமைப்பின் செயற்திறனை மேம்படுத்துவதற்குமென முன்மொழியப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், கடந்த 7 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், மேற்கூறப்பட்ட இலக்குகளை அடைந்துகொள்வதற்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவே இருக்கிறது.
அதேவேளை இந்த யோசனை தொடர்பில் மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளின் சங்கங்களும் விசனம் வெளியிட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றமுடியுமா என்பதில் பல்வேறு கேள்விகள் உள்ளன. அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரை இறையாண்மை மக்களிடத்திலேயே இருப்பதாகக் கூறுவதுடன், உறுப்புரை 4(சி) இன் ஊடாக நீதித்துறை அதிகாரம் இறைமையின் ஓரங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் நாட்டின் மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதிக்கும் என்பதனால், இத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களின் அனுமதி பெறப்படவேண்டும்.
அதேபோன்று இந்தத் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டதன் பின்னர், அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கான உரிமை சகல பிரஜைகளுக்கும் உண்டு.
அதற்மைய இச்சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், தமது சக நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் ஒரு திருத்தத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்துத் தீர்மானிக்கவேண்டிய கட்டாயம் உயர்நீதிமன்றத்துக்கு ஏற்படும். இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்.
இந்நிலையில் மேற்படி யோசனை தொடர்பில் எழுந்திருக்கும் சகல எதிர்ப்புக்களையும் கடந்து முன்நோக்கிச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில், இந்தச் சட்டமூலம் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும். அதனூடாக நீதிபதிகளின் பதவிக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயத்தின் அரசியலமைப்புத்தன்மையை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டிய சூழ்நிலையைத் தவிர்த்து, பொதுமக்களின் நிலைப்பாட்டின் பிரகாரம் தீர்மானிக்கமுடியும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
