ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கும் காணியை அபகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் அவசர முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
அரசங்குளத்தில் பொலிஸ் நிலையத்திற்கு 5 ஏக்கர் காணியும் கட்டிடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தும் பொலிஸார் அங்கு செல்ல மறுத்து வருகின்றனர். தற்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் இயங்கும் பொலிஸ் நிலையம், அதன் அருகிலுள்ள காணியையும் ஆக்கிரமித்தால் ஓமந்தையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
பொதுமக்களின் அழைப்பை ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி ந. காண்டீபன் அவர்களும், வவுனியா வடக்கு உபதவிசாளர் வி. சஞ்சுதன், பிரதேச சபை உறுப்பினர் க. பிரதீபன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் விஎஸ் தவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
