கொழும்பில் “உண்டியல்” முறையின் ஊடாக சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 10.467 மில்லியன் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறியதை அடுத்து, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், போலியான 1,000 ரூபாய் நாணயத்தாளை வைத்திருந்ததாகக் கூறியும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
