வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசத்தின் பங்கேற்புடன் கூடிய சுயாதீன குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்று அவசியம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடி வரும் ஒவ்வொரு தாயும் உயிரிழக்கும்போதும், எதிர்கால நீதிக்கான ஒரு சாட்சியம் அழிகிறது. எனவே, இந்த சாட்சியங்கள் தற்போதே முறையாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்.
மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் வெறுமனே ஒரு தொழில்சார் பணியாக இருக்கக்கூடாது. மாறாக, அவை நீதியை நோக்கிய பயணமாக அமைய வேண்டும்.
இன்றைய சர்வதேச மாநாட்டின் ஊடாக ‘எங்களுடைய உறவுகள் எங்கே?’ என்ற முக்கியமான செய்தியை சர்வதேச சமூகத்தை நோக்கி அனுப்பி வைக்கின்றோம்” என்றார்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர்.
அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது.
இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்
