(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு T 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.
2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி. பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றபுலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் யூன் 17 ம் திகதி குற்றபுலனாய்வுப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொண்டபோது, சந்தேக நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இருந்தவாறு இணையவழி காணொளி ஊடாக (சூம்) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்ததுடன் லண்டனில் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்
