நவீன உலகிற்கு ஏற்ப உயர்கல்வி பாடத்திட்டங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை (03) கொழும்பில் போராட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பீடங்கள் மற்றும் வளாகங்களின் உட்கட்டமைப்பு, ஆய்வகங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்குத் தேவையான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி மாணவர்களின் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் தண்ணீர் தாரை பிரயோக வாகனமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தற்போதைய துணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்த குமாரவை சந்திக்க மாணவர் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
