சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்கு வாழும் அனைத்து இலங்கை மக்களும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகப் பொது அலுவலகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, கைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் (National Warning Alerts) கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உடனடியாகச் தொழிற்படும் வகையில் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்போது கட்டடங்களுக்குள் தங்கியிருந்து ஜன்னல்கள், கண்ணாடிகள், பால்கனிகள் மற்றும் கூரைகளில் இருந்து தள்ளி பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
வெளியில் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான கட்டடத்திற்குள் பிரவேசிக்கவும் அல்லது பலமான சுவரின் பின்னால் ஒதுங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், வாகனங்களை ஓட்டிச் செல்பவராக இருந்தால் வாகனத்தைச் சாலையின் ஓரமாக நிறுத்தி பாலம் மற்றும் உயரமான கட்டடங்களில் இருந்து தள்ளி இருக்குமாறும் அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே சம்பவங்களை ஒளிப்படம் எடுப்பது, காணொளி பதிவு செய்வது, சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது அல்லது கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும், சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பாமல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
இதனிடையே அவசர அவசியங்களுக்கான அழைப்பு எண்களாக, மக்கா மற்றும் மதினா பிராந்தியங்களுக்கு 911 ஏனைய பகுதிகளுக்கு 998 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதரகப் பொது அலுவலகத்தின் அவசர தொடர்பு எண்: 056 098 6671 என்பதுடன் இது அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
