பிரித்தானியாவின் சிரென்செஸ்டர் நகரில் பிறந்த கெத்ரின் (Cathryn), நாட்டின் வடக்கே கிளிநொச்சியிலிருந்து தெற்கே மாத்தறை வரை 500 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை வெறும் 4.5 நாட்களில் (110 மணி நேரத்திற்குள்) ஓடிக் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைக்கத் தீவிரமாக முயன்று வருகின்றார்.
கடந்த 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது ஓட்டப்பயணத்தை ஆரம்பித்த இவர், நாளை 19 ஆம் திகதி சனிக்கிழமை மாத்தறையைச் சென்றடைய இலக்கு வைத்துள்ளார்.
இதுவரை இந்த குறிப்பிட்ட பிரிவில் எந்தவொரு சாதனையாளரும் இல்லாத நிலையில், புதிய சாதனையை நிலைநிறுத்த இவர் முயல்கிறார்.
நாட்டின் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, கெத்ரின் இரவிலும் தொடர்ச்சியாக ஓடி, பகல் நேரங்களில் மிகக் குறுகிய இடைவெளிகளிலேயே ஓய்வெடுத்து வருகிறார். நாளாந்தம் 100 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை இவர் கடப்பதாக தெரிவித்துள்ளார்.
யானைகள், பாம்புகள், கால்நடைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து அவரைக் காக்கவும், தேவையான உணவு மற்றும் நீர்ச்சத்தை வழங்கவும் ஒரு பாதுகாப்புக் குழுவினர் அவருடன் வாகனத்தில் பின்தொடர்கின்றனர்.
ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது பயணத்தை நேரலையாகக் கண்காணிக்கத் வசதியாக, Garmin Tracker வழியே அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் முன்னேற்றம் பகிரப்பட்டு வருகின்றது.
கின்னஸ் உலக சாதனை முயற்சியைத்தாண்டி, நாட்டிலுள்ள ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த உழைக்கும் ‘Their Future Today’ தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டுவதையும் இவர் தனது பிரதான மனிதநேய நோக்கமாகக் கொண்டுள்ளார்.
உடல் ரீதியான கடும் சவால்கள் மற்றும் களைப்புகளுக்கு மத்தியிலும், உறுதியான மனப்பாங்குடன் இவர் தனது பயணத்தை இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
