2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தண்டனை அமுலுக்கு வரும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாகவும், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.
கொலை, பயங்கரவாதச் செயலை மேற்கொள்ள சதி செய்தல், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றம் வழங்கியது.
