22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும், தமது போதிதம்ம மனித அகிம்சை சர்வதேச அமைப்பின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் அழுத்தங்கள், தன்னிச்சையான கைதுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போதிதம்ம மனித அகிம்சை சர்வதேச அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதிதம்ம தேரர் சுட்டிக்காட்டினார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற எடுத்து வருகின்ற நடவடிக்கை தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (22) விஜயம் செய்து பல முக்கிய முறைப்பாடுகளை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் இன்று அறிவித்துள்ளோம். தகவல்களை மின்னஞ்சல் மற்றும் இணையவழியாகவும் அனுப்பியுள்ளோம். எமது அமைப்பின் செயற்பாடுகளுக்கு பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொள்ளும் அழுத்தங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்துள்ளோம்.
தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் இங்கு வந்து அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாரிய பிரச்சினை உள்ளது. தன்னிச்சையான கைதுகள் தொடர்பிலும் முறைப்பாடு செய்துள்ளோம்.
எமது அமைப்புக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை. சமூக ஊடகங்களில் நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக சேறுபூசுகின்றனர். எமது அமைப்பு சுயாதீனமானது. இந்த நாட்டில் அனைவருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உள்ளது. அவ்வாறிருக்கையில் எம்மை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?
கடந்த மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தபோது, மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என அதன் செயலாளர் தெரிவித்தார். இதனால் ஆணைக்குழு பாரிய சிக்கலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அல்லாது, தமது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் செயற்பட வேண்டும். நாம் வாழும் குறுகிய காலத்தில் நாட்டை நேசிப்பவர்களையும் நல்லொழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க விரும்புபவர்களையும் ஒன்றிணைப்போம். அவர்களின் அரசியலை நாம் பார்க்கவில்லை.
சமூக ஊடகங்களிலும் தற்போதைய ஆட்சியாளர்களாலும் எமது அமைப்பைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து சேறுபூச வேண்டாம். நாம் நாட்டில் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நிறைந்த நீதியான சமூகத்தை உருவாக்கவே செயற்படுகின்றோம். இதற்காக ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பையும், மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.
மேலும், இங்கு பாதுகாப்பு வழங்கிய புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். அவர்கள் வழங்கப்படும் உத்தரவுகளையே நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதை புரிந்துகொள்கின்றோம். சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரவே இவ்விடயங்களை வெளிப்படுத்துகின்றோம்.
இன்று இங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடைபவணியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். மழையால் அது பாதிக்கப்பட்டது. வழியில் வந்தவர்களையும் நேரமின்மை காரணமாக திருப்பி அனுப்பினோம். எதிர்காலத்தில் நாட்டில் நல்லொழுக்கம் நிறைந்த நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான பெரிய திட்டம் எம்மிடம் உள்ளது என்றார்.
