விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை எவரும் மறக்கக்கூடாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த வீரர்களை அவமதித்துக்கொண்டு வடக்கில் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனுக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டு என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆகவே அனோஜன் விவகாரத்தில் துரிதகரமாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு எ ன்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் புலிகள் அமைப்பின் உறுப்பினரான பால் ராஜ் தேசிய தலைவர் என்று பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார். அவரது உரை இன்றுவரை பாராளுமன்ற ஹன்சாட் பதிப்பில் இருந்து நீக்கப்படவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பின் கொடி,சின்னம் மற்றும் அந்த அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது நினைவுப்படுத்தும் எவ்வித செயற்பாடுகளிலும் சட்டத்துக்கு அமைய செயற்பட முடியாது. ஆனால் வடக்கில் நல்லூர் கோயிருக்கு அருகில் புலிகள் அமைப்பின் போராளியான திலீபனுக்கு உருவச்சிலை புனரமைக்கப்பட்டு, கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் இறையான்மையை பாதுகாத்த வீரர்கள் இன்று அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆனால் வடக்கில் புலிகள் அமைப்பின் போராளிகள் கௌரவிக்கப்படுகிறார்கள். திலீபனின் உருவச்சிலை திறப்பு விழாவுக்கு பாடசாலை மாணவர்கள் சீறுடையுடன் கலந்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் மத்திலும் பிரிவினைவாத சிந்தனை திட்டமிட்ட வகையில் விதைக்கப்படுகிறது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
