வெல்லவாய – தனமல்வில வீதியின் கித்துல்கொட்டே பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாகிஸ்தான் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர், ஒரு மாத சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்த கராச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பாகிஸ்தான் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலை வெல்லவாய பகுதியில் இருந்து தனமல்வில நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த கார், முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது,
இதன்போது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காரின் சாரதி கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
