ஐரோப்பாவில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் ஏடல்வைஸ் (Edelweiss) விமான நிறுவனம் இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, நிறுவனத்தின் முதலாவது விமானம் இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணியளவில் சூரிச் நகரிலிருந்து 290 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஏ-340 (A340) ரக விமானத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சேவையுடன், இம்முறை குளிர்கால விமானப் போக்குவரத்துக்காக ஏ-350 (A350) ரக விமானங்களையும் பயன்படுத்த ஏடல்வைஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் 2027ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வரை சூரிச் – கட்டுநாயக்க இடையே மொத்தம் 65 விமானச் சேவைகளை முன்னெடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இந்த விமானச் சேவைகள் இடம்பெறவுள்ளன.

முதலாவது விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்த பயணிகளை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.
