இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்குக் கால் முன்பகுதியில் புதிதாக காயம் ஏற்பட்டுள்ளது.
ஒக்டோபர் 6 ஆம் திகதி தொடங்கும் அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அவர் பங்கேற்கவிருந்தார்.
தற்போது இந்தக் காயத்தால் அதிலிருந்து விலகியுள்ளார்.
அத்துடன், ஒக்டோபர் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அவர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார்.
ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் காயம் காரணமாகவே அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடருக்கு உடற்தகுதி அடிப்படையில் தேர்வாகியிருந்த அவர், முதல் போட்டிக்கு இரண்டு வாரங்களே உள்ள சூழலில் ஏற்பட்டுள்ள இந்த காயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
