தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் பெய்து வரும் மிகக் கடுமையான மழை காரணமாக நகரம் முழுவதும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நகரின் 50 வலையங்களும் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக (Disaster-affected zones) அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 21 மாகாணங்களைச் சேர்ந்த 84,000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளுக்கான பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கால்வாய்களில் நீர்மட்டம் நிரம்பி வழிவதால், பொதுமக்களை வீடுகளிலேயே இருக்குமாறும், பொருட்களை மேல்தளங்களுக்கு மாற்றுமாறும் பேங்கொக் மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
நகரம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கக்கூடும் என தாய்லாந்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.
