கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி 50 இலட்சம் கையெழுத்துகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் மிஹிந்தலை புனித பூமியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.
கையெழுத்துகளை சேகரிக்கும் வேலைத்திட்டத்தை மிஹிந்தலை விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், ஜனாதிபதி நேரடியாக ஆவணங்களைத் தயாரிப்பதில்லை. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளே மேற்கொள்கின்றனர். அந்த அதிகாரிகளின் நடவடிக்கையில் ஏதேனும் குறைபாடு அல்லது தவறு ஏற்பட்டிருந்தால், அதற்காக ஞானசார தேரர் பொறுப்பல்ல. அதிகாரிகளினால் ஏற்பட்ட தவறை சரிசெய்து, சட்டரீதியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மிஹிந்தலை புனித பூமியில் இருந்து நாம் கோரிக்கை விடுக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அதனை சரிசெய்து, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இலங்கையின் நான்கு திசைகளிலும் உள்ள பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள், உபாசிகைகள் உள்ளிட்ட நான்கு தரப்பினரிடமிருந்தும் கையெழுத்துகள் சேகரிக்கப்படவுள்ளன.உள்ளூர் செய்திகள்
அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்து இனத்தவரிடமிருந்தும் கையெழுத்துகளைப் பெற்று, மொத்தமாக 50 இலட்சம் கையெழுத்துகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேகரிக்கப்படும் கையெழுத்துகள் அடங்கிய ஆவணங்களை அதி வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, அவர்களின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
