அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Medicare புள்ளிவிபர இணையத்தளத்தில் OpenAI நிறுவனத்தின் AI Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்க, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேனை அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த AI Agent, கடந்த ஜூன் மாதம் Services Australia நிர்வகிக்கும் Medicare Statistics Reporting Service இணையத்தளத்தில் அனுமதியற்ற அணுகலைப் பெற்றதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
அந்த Agent பொது மற்றும் பொது அணுகலுக்கு உட்படாத சில கோப்புகளை அணுகியதாகவும், எனினும் தனிநபர்களின் Medicare தகவல்கள் அணுகப்பட்டதாக இதுவரை ஆதாரம் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் சிறப்புப் பணிக்குழுவொன்றையும் அமைத்துள்ளதுடன், சம்பவம் நாடாளுமன்றத்தின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு தெரிவுக்குழுவிடமும் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடிக்கும் (Dario Amodei) AI தொடர்பான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விவகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு Agent-களின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அவுஸ்திரேலியாவில் AI பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
