பயங்கரவாதி சஹ்ரானின் குழுவுக்கு சியான் எனும் புதிய தலைவர் தற்போது கல்முனை பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்கில் இருந்து அண்மையில் விடுதலையான 09 பேரில் ஒருசிலர் இந்த குழுவில் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.
அரசாங்கம் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது. ஆரம்பத்திலேயே இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகள் அமைப்பின் பிரிவினைவாத செயற்பாடுகள் மறைமுகமாகவே காணப்படுகிறது.
திலீபனின் உருவச்சிலை அமைக்கப்பட்டமை மற்றும் அகற்றப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்திலேயே அனுமதிக்காமல் இருந்திருந்தால், எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது.
நாட்டில் இன்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் நடைமுறையில் செயற்படுகிறது. பயங்கரவாதி சஹ்ரானின் குழுவுக்கு அண்மையில் கல்முனை பகுதியில் சியான் எனும் நபர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் அண்மையில் விடுதலையான 09 பேரில் ஒருசிலர் சஹ்ரானின் புதிய குழுவில் இணைந்துள்ளார்கள்.இதுகுறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்கள அடிப்படைவாதம் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆரம்பத்திலேயே முடிவுக்கட்ட வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
