ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவால் இன்று (30) இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, நாமல் ராஜபக்சவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு கடந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருந்தது. இதன்போது, மூன்று விடயங்கள் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, குறித்த மூன்று விடயங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசாரணையையும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் மற்றுமொரு விசாரணையையும் ஒன்றிணைத்து வழக்குத் தொடர முடியுமா என்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு விசாரணைகளுக்கும் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில் நான்காவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள நபர் தொடர்பில் கையூட்டல் சட்டத்தின் 149ஆவது பிரிவின் கீழ் சத்தியப்பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு, குறித்த சத்தியப்பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
