சிங்கப்பூர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டில் இருந்து சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
மலேசியாவில் இருந்து வந்த MH 179 விமானத்தின் மூலம் அவர் வருகை தந்துள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து அழைப்பாணை கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே, ஷிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டுத் தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியிருந்தார்.
இந்த கோரிக்கை நேற்று (05) மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் எதிர்மனுதாரராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சிரிலிய சவிய’ நிதியத்தின் நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகக்பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் பின்னர் வேறொரு திகதியைக் கோரியிருந்தபோதிலும், அவர் முன்னிலையாகத் தவறினால் கைது செய்யப்படுவார் எனப் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு அறிவித்திருந்ததாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பின்னணியிலேயே அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
