பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் AML/CFT சர்வதேச தரநிலைகள் தொடர்பில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு குறித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், இந்த மதிப்பீட்டிற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமைச்சுகள் மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கு, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு முழுமையான பங்களிப்பை வழங்குமாறு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இதற்கான பணிகளில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
