செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புகைப்படத் திருத்தக் கருவிகளைப் பயன்படுத்தி போலியான பணப் பரிமாற்ற பற்றுசீட்டுகளை தயாரித்து, விற்பனையாளர்களை ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதாகவோ அல்லது சேவைகளைப் பெற்றுக்கொள்வதாகவோ கூறி, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். பின்னர், WhatsApp அல்லது Messenger போன்ற சமூக ஊடகங்கள் மூலம் போலியான பணப் பரிமாற்ற பற்றுசீட்டுகளை அனுப்புகின்றனர்.
இந்தபற்றுசீட்டுகளில் கணக்கு இலக்கம், பரிமாற்ற நேரம், பெயர் மற்றும் பணத் தொகை போன்ற விவரங்கள் சரியாக இருப்பதைப் போலத் தோன்றக்கூடும். இதனால், உண்மையான பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக நம்பும் விற்பனையாளர்கள் பொருட்களை ஒப்படைக்கும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே, பணம் செலுத்தப்பட்டதற்கான படத்தை அல்லது பற்றுசீட்டை மட்டும் நம்பாமல், தங்களது வங்கிக் கணக்கில் பணம் உண்மையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பொருட்களை ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
