மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி, இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாகப் பிள்ளையானை ஆஜர்படுத்தியும், ஏனைய இரு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வவுணதீவு பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, இவ்வழக்கில் தேடப்படும் மற்றொரு சந்தேக நபரான முகமட் பாய்ஸ் லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராகத் தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
