சிறைக்கைதிகளாகும் பௌத்த துறவிகளின் காவியுடை தொடர்பில் சிறைச்சாலை விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போது, அவர் அணிந்திருக்கும் காவியுடை தொடர்பில் பௌத்த விவகாரத் திணைக்களத்திற்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
மேலும், சிறைச்சாலையிலிருந்து ஏதேனும் காரணத்திற்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் துறவிகள், சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது நிகாயத்திடமிருந்து காவியுடையை அகற்றுமாறு அறிவிப்பு கிடைக்கும் வரை அதனை அணிந்திருக்க அனுமதிக்கப்படுவர்.
ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களிலும், அவர்களின் மத நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஏற்பாடுகளை மாற்றியமைக்க குழு பரிந்துரைத்துள்ளது.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏற்பட்ட சூழ்நிலைகளைத் தொடர்ந்து, சிறைச்சாலை விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதனையடுத்து நியமிக்கப்பட்ட குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய, சிறைச்சாலை நிலையான கட்டளை 356 மற்றும் திணைக்களக் கட்டளை 550 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
