மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால், நேற்று (14) ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம , சீதா ஆற்றைக் கடக்க முற்பட்ட, 43 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
தெல்ஹவாடிகம பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான குறித்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மேலும் ஐந்து பேருடன் இணைந்து குறித்த பெண் ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளார்.இதன்போது, ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன பெண்ணைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வருவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியான மழையினால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவற்றைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
