இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு உண்மையான மற்றும் சரியான தகவல்களை வழங்கும் நோக்கில், ‘RIES’ (Reform Information & Enquiry Service) என்ற உத்தியோகபூர்வ இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன், நேற்று புதன்கிழமை (14) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த இணையதளம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே சரியான புரிதலை ஏற்படுத்துவதுடன், எழும் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக பொதுமக்கள் தங்களுடைய கேள்விகளை https://edureformfact.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
கல்விச் சீர்திருத்தம் தேசியப் பொறுப்பு – பிரதமர்
நாட்டின் எதிர்காலம் தரமான கல்வியிலேயே தங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடையே ஆக்கபூர்வமான தேசிய உரையாடலை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இது வெறுமனே பாடத்திட்டங்களை மாற்றும் நடவடிக்கை அல்ல என்றும், நாட்டின் முழுக் கல்வி முறைமையையும் மாற்றியமைக்கும் விரிவான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பு மட்டுமல்ல; அது முழு நாட்டினதும் தேசியக் கடமை எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் ஒரு கட்டம் 2026ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டில் ஆறாம் தரத்திற்கும் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சிகள், கல்வி உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் என்றும், கல்வியை அரசியல் மோதல்களுக்கான களமாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் முறைக்கு முக்கியத்துவம்
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விளக்கமளித்த கல்வி அமைச்சின் பொதுமக்கள் விழிப்புணர்வு உபகுழுவின் தலைவர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க, மனப்பாடக் கல்வியை மையமாகக் கொண்ட பாரம்பரிய முறையிலிருந்து விலகி, மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் முறைக்கு மாறுவதே சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
மாணவர்கள் பாடங்களை மனனம் செய்து பரீட்சைகளில் பதிலளிப்பதற்கு மட்டுப்படுத்தப்படாமல், கற்ற அறிவை நிஜ வாழ்க்கைச் சூழல்களில் பயன்படுத்தக்கூடிய திறன்களைப் பெறுவதற்கு இந்த முறைமை வழிவகுக்கும் என அவர் விளக்கினார்.
அத்துடன், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் அவர்களின் உணர்வுபூர்வமான, சமூக, உடலியல் மற்றும் ஒழுக்கவியல் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
21ஆம் நூற்றாண்டின் திறன்களுக்கு முன்னுரிமை
புதிய கல்வி முறைமையின் கீழ், மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவுடன் தொழில்நுட்பம், நிதி, ஊடகம் மற்றும் அறிவியல் தொடர்பான அறிவும் மேம்படுத்தப்படவுள்ளது.
மேலும், விமர்சனச் சிந்தனை, தொடர்பாடல், பகுப்பாய்வு மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
பொதுக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைத்து, மாணவர்கள் தங்களுடைய திறன்களுக்கும் ஆர்வங்களுக்கும் ஏற்ப வெவ்வேறு கல்விப் பாதைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.
இதன் மூலம் 13ஆம் தரம் வரையிலான கல்விப் பயணத்தில் எந்தவொரு பிள்ளையும் பின்தங்கிவிடாத வகையில் விரிவான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறன்களைத் தொடர்ச்சியாக மதிப்பிடும் முறை
இதுவரை நடைமுறையில் இருந்த மனப்பாட அறிவைச் சோதிக்கும் இறுதிப் பரீட்சை முறைக்கு மேலதிகமாக, மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மதிப்பிடும் முறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க தெரிவித்தார்.
இதன் மூலம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன், படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் போன்றவற்றை மதிப்பிடுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கங்கள், முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு தொடர்பாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்விப் பிரதியமைச்சர் நலின் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
