உலகம் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வரும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் போதிய உணவின்றியும், ஆரோக்கியமான உணவைப் பெற முடியாமலும் வாழ்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 64.5 கோடி மக்கள் பசியை எதிர்கொண்டதாகவும், ஏறத்தாழ 270 கோடி மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்கி உண்ண முடியாத நிலை காணப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன.
இன்று உலக உணவு தினம்
உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1981ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் சர்வதேச அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
உலகில் பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை மேம்படுத்துதல் ஆகியவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
2026ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள், “இன்றே புதுமைகளைப் புகுத்துங்கள்; நாளைய ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துங்கள்” என்பதாகும். உணவு உற்பத்தி, விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்களுக்குத் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் மூலம் தீர்வுகளைக் காண்பதன் அவசியம் இதில் வலியுறுத்தப்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய சவால்
உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுவதற்குப் போதிய உணவு உற்பத்தி இல்லாமை மட்டுமே காரணமல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வறுமை, ஆயுத மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உணவு விநியோகத்தில் ஏற்படும் தடைகள் போன்ற பல காரணிகளும் மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, தொடர்ச்சியான நெருக்கடிகள் உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதுடன், உணவு மற்றும் உரங்களின் விலைகளையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதன் விளைவாக, குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்வது மேலும் சவாலாக மாறுகிறது.
ஆரோக்கியமான உணவில் பழங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துகள் இடம்பெற வேண்டும். ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருப்பதால், பல குடும்பங்கள் குறைந்த விலையிலான உணவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலை
2026ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் சுமார் 30.9 கோடி மக்கள் பசியை எதிர்கொண்டுள்ளனர். உலகின் பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்ந்து முக்கிய சவாலாக உள்ளது.
வறுமை, காலநிலை மாற்றம், வறட்சி, மோதல்கள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள் பல பகுதிகளில் உணவு கிடைப்பதையும் அதன் விலையையும் பாதிக்கின்றன.
அதேவேளை, விவசாய உற்பத்தியை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய உணவு இழப்புகளைக் குறைத்தல், சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைவருக்கும் உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
உலகில் பசியைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான உணவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், விவசாயிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
உணவு உற்பத்தியை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், உணவுப் பொருட்களின் விநியோகச் செலவுகளைக் குறைத்தல், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் விலையைக் கட்டுப்படியாக வைத்தல் மற்றும் உணவு வீணாவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
உணவைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துதல், மீதமாகும் பாதுகாப்பான உணவை வீணாக்காமல் பகிர்ந்தளித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற தனிநபர் முயற்சிகளும் இந்த இலக்கை அடைவதற்குப் பங்களிக்க முடியும்.
உலகில் அனைவருக்கும் உணவளிக்கத் தேவையான அறிவும் தொழில்நுட்பமும் வளங்களும் காணப்படுகின்றன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி, ஒவ்வொரு மனிதருக்கும் போதுமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே உலக உணவு தினம் வலியுறுத்தும் முக்கிய செய்தியாகும்.
