இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஒக்டோபர் 22) இடம்பெற்ற ஆறு தனித்தனி விபத்துகளில் விமானப்படை வீரர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபராதுவ, சுன்னாகம், மஹவ, புஸ்ஸல்லாவ மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. புஸ்ஸல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹபராதுவையில் ரயில் மோதி விமானப்படை வீரர் பலி
மெதகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவர், பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். விடுமுறைக்குப் பின்னர் கடமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகத்தில் லொறி மோதி சைக்கிளோட்டி பலி
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், இணுவில் கந்தசாமி கோவில் சந்திக்கு அருகில் டிப்பர் லொறி மோதியதில் 67 வயதுடைய சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹவ பகுதியில் பஸ் மோதி பாதசாரி பலி
மதகல்ல – தலதகம வீதியில், வாராந்த சந்தைக்கு அருகில் பஸ் மோதியதில் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
புஸ்ஸல்லாவையில் வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து இருவர் பலி
கடதொர சந்தியிலிருந்து கொட்டகெபிட்டிய நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தைச் செலுத்திய 57 வயதுடைய ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் பயணித்த 55 வயதுடைய பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
களனியில் கார் மோதி பெண் பலி
பியகம – கொழும்பு வீதியின் பிலபிட்டிய பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பெண் ஒருவரை மோதிய பின்னர் மின்கம்பத்திலும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் கண்டானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் இடம்பெற்ற இந்த ஆறு விபத்துகளிலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
