கடந்த சனிக்கிழமை (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் ஏற்பட்ட திடீர் மின் கட்டமைப்பு முடக்கம் காரணமாக, நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் உடனடியாகச் செயலிழந்தன.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிலையத்தைச் சில நாட்களுக்கு தேசிய மின் கட்டமைப்பிலிருந்து துண்டித்து வைத்திருக்கத் தீர்மானிக்கப்பட்டதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
இவ்வாறான அவசர நிலைமைகளின்போது பின்பற்றப்படும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், தேவையான பாதுகாப்புப் பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூன்று மின் உற்பத்தி அலகுகளும் மீண்டும் இயக்கப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மீளிணைப்பின் மூலம் நாட்டின் மின்சார விநியோகத்திற்குப் பங்களிக்கும் நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று அலகுகளும் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளன.
