அதிகரித்து வரும் சந்தைத் தேவையை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு மேலதிகமாக, குட்வில் (Goodwill) என்ற கப்பல் மூலம் மேலும் 3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கடந்த சனிக்கிழமை (24) நாட்டை வந்தடைந்துள்ளது.
மேலும், மற்றுமொரு எரிவாயுக் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவிலிருந்து, கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தை வலுப்படுத்துவதுடன், நுகர்வோருக்கு எவ்வித தடையுமின்றி எரிவாயுவைப் பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
