இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதற்கான தெளிவான திட்டமின்றி கனடாவில் நிதி வசூலிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன், குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து குடியேற்றுவதற்காக, கனடியன் பேரவை மற்றும் ஜே.எம்.எஸ். ஆகிய அமைப்புகள் கனடையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நிதி வசூலித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிக்கு உரிய திட்டமிடலும் அரசாங்கங்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் திருச்சி உள்ளிட்ட அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள், தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார். இதற்கமைய, அடுத்த மாதம் குழுவொன்றுடன் இந்தியாவுக்குச் சென்று அகதி முகாம்களைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அகதிகளை மீள்குடியேற்றுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அதற்கான திட்டம் என்ன, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளனவா, மீள்குடியேற்றத்துக்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தாய்நாட்டுக்குத் திரும்ப விரும்பும் மக்களுக்கு காணி, வீடு, வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு வசதிகளை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அகதிகளின் விருப்பங்களை அறிந்து, இரு நாடுகளின் அரசாங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னரே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட தரப்பினரை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், கனடியன் பேரவை மற்றும் ஜே.எம்.எஸ். அமைப்புகள் தம்முடன் தொடர்புகொண்டு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
வெளிநாடுகளில் கடவுச்சீட்டு பெறுவதில் தாமதம்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாமதம் ஏற்படுவதாகவும், கட்டண அதிகரிப்பினால் அவசரத் தேவைகளுக்காக இலங்கைக்குத் திரும்ப விரும்புவோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் விவகாரங்கள் குறித்தும் கருத்து
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரபாகரன் கருத்துத் தெரிவித்தார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதிகள் இடம்பெறுவதாக அவர் குற்றஞ்சாட்டியதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கடந்த தேர்தலின்போது 60 கோடி ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
