சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை!
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நேரில் சந்தித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அனோஜன் சிவராசாவின் எதிர்கால வழக்கு நடவடிக்கைகள் குறித்து தூதுவர் கலந்துரையாடியதுடன், அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்துவதற்கும் தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நீதிமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தூதுவர் அமீர் அத்வாஜ் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், எதிர்கால வழக்கு நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுப்பதற்காக அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்கால சட்ட நடவடிக்கைகளின்போது நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளிக்கப்படும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
