ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில், 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (28) கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த எயார்பஸ் கொள்வனவு விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு நேற்று (27) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதையடுத்து, நாமல் ராஜபக்ச சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
குற்றப்பத்திரிகைகள் கையளிப்பதற்காக சந்தேகநபரை இன்று தொடர்புடைய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு அரச தரப்பு பிரதி மன்றாடியார் நாயகம் பண்டார நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு சட்ட வாதங்களையும் ஆராய்ந்த பிரதம நீதவான், குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மேலதிக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தமது நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.
இதன்படி, நாமல் ராஜபக்சவை தாமதமின்றி உரிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அவர் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், கிரிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் பிணை விண்ணப்பமும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
