தாய்லாந்திலிருந்து அன்பளிப்புப் பொதியாக அனுப்பப்பட்ட மேசைப் பாகங்களுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.158 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பேலியகொட சுங்கக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் ராகமையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
பயணிகள் சேவைப் பிரிவின் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில், பிரதி சுங்கப் பணிப்பாளர் எம்.கே.ஆர். குமாரவினால் சந்தேகத்திற்குரிய பொதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சுங்கப் பயணிகள் சேவைப் பிரிவு மற்றும் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, மேசைப் பலகைகளின் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13,372 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் தெரு மதிப்பு ரூ.133.72 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2,428 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் தெரு மதிப்பு ரூ.24.28 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
