முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் இருந்து கடலுக்குத் தூண்டில் தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கை இன்று (29) மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் கடலுக்குச் சென்ற புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகிய மூவரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன மீனவர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து நேற்று (28) தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எட்டு படகுகளில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மீனவர்கள் கரை திரும்பினர்.
அர்னாப் புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பினால் குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல்நாட்டுக் கடற்பரப்பிற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், விமானப்படை மற்றும் கடற்படையின் உதவியுடன் இன்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, காணாமல்போன மீனவர்கள் தொடர்பான தகவல்களை இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அயல்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து, சர்வதேச ரீதியிலான தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் உதவிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
