மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அது தொடர்பான அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விசேட செயற்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலம் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு அமைவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவும் பல யோசனைகளைச் செயற்குழுவிடம் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் சில அம்சங்கள் முழுமைப்படுத்தப்படாததால், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றம் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும், அதன் பின்னரே தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாணசபைகளில் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற விசேட செயற்குழு விரைவில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
