கடந்த 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பாக, தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாக மின்சாரத் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாகவே நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பதை அதிகாரிகள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
குறித்த அறிக்கையின்படி, சம்பவத்தன்று காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகிலிருந்து கிடைத்த 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழு மின்சாரக் கட்டமைப்பும் செயலிழந்துள்ளது.
இதன்போது தானியங்கி மின்சாரத் துண்டிப்பு முறைமையின் ஐந்து கட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஸபான உள்ளிட்ட பல மின் உற்பத்தி நிலையங்களின் அலகுகளும் பாதுகாப்பு முறைமைகளின் காரணமாக முடங்கியுள்ளன.
நாட்டின் முழுமையான மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர ஐந்து மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பை மீளச் செயற்படுத்தும் நடவடிக்கையின்போது யுகதனவி உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் தொழில்நுட்பத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு செயலிழந்தமைக்கான துல்லியமான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
