பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை (Indefinite Leave to Remain – ILR) பெறுவதற்கான காத்திருப்பு காலத்தைப் பெரும்பாலான குடியேறிகளுக்கு 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிய ‘Earned Settlement’ எனப்படும் திட்டத்தின் கீழ், ஒருவர் பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கான காலம், அவரது வருமானம், வேலைவாய்ப்பு, சமூகப் பங்களிப்பு மற்றும் குடியேற்ற விதிகளைப் பின்பற்றியமை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இந்தப் புதிய விதிகள் தொடர்பான அறிவிப்பை நவம்பர் 2ஆம் திகதி வெளியிட்டுள்ளார். இம்மாற்றங்கள் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி நிரந்தர வதிவிடத்திற்கான காத்திருப்பு காலம்:
3 ஆண்டுகள்: ஆண்டுக்கு 125,141 பவுண்டுகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் குறிப்பிட்ட உயர்திறன் விசா திட்டங்களின் கீழ் வருபவர்கள்.
5 ஆண்டுகள்: ஆண்டுக்கு 50,271 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், தகுதியுடைய மருத்துவம் மற்றும் கல்வித்துறை பொதுச் சேவைப் பணியாளர்கள்.
5 ஆண்டுகள்: 2025 மே மாதத்திற்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்து, ஆண்டுக்கு குறைந்தது 25,000 பவுண்டுகள் வருமானத்துடன் விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள தகுதியுடைய பராமரிப்புப் பணியாளர்கள்.
10 ஆண்டுகள்: புதிய விதிகளின்படி பெரும்பாலான ஏனைய குடியேறிகளுக்கான பொதுவான காத்திருப்புக் காலம்.
20 ஆண்டுகள்: குடியேற்ற விதிகளை மீறியவர்கள் அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் முன்னுரிமைத் தகுதியைப் பெறாதவர்கள்.
அகதிகளுக்கான விதிகள்:
பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வழிகளில் வந்த அகதிகள் 5 ஆண்டுகளில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஏனைய வழிகளில் வந்த அகதிகளுக்கு 20 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் விதிக்கப்படலாம்.
வேலை அல்லது கல்வியில் ஈடுபடுவோருக்கு இந்தக் காலம் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்படலாம்.
- சிறிய படகுகள் உள்ளிட்ட சட்டவிரோதமான அல்லது இரகசியமான வழிகளில் நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு மேலதிகமாக 10 ஆண்டுகள் காத்திருப்புக் காலம் விதிக்கப்படலாம். இதனால் சிலருக்கு மொத்தம் 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்போருக்கான புதிய அடிப்படை நிபந்தனைகள்:
குற்றப் பதிவுகள் இல்லாதிருக்க வேண்டும்.
உயர்தர ஆங்கில மொழித் திறன் அவசியம்.
அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன்கள் இருக்கக்கூடாது.
தேசிய காப்புறுதி (National Insurance) பங்களிப்புகளைத் தொடர்ந்து செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றவர்களின் அந்த உரிமை பறிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியக் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள், ஹொங்கொங் பிரித்தானிய தேசியர்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான தற்போதைய பாதைகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
