பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது வருடாந்த வேல் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு, கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக் கதிர் தேர்ப்பவனி இன்று (28) காலை 7.30 மணிக்கு புறகோட்டை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் கோவிலை சென்றடையவுள்ளது.
ஊர்வலம் கடற்கரை வீதி, காஸ் வேர்க்ஸ் சந்தி, மெயின் வீதி, கான் கடிகார கோபுரம், வை.எம்.பி.ஏ சந்தி, லெய்டன் பாஸ்டியன் வீதி, யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பயணிக்கவுள்ளது.
குறிப்பாக கொழும்பு காலி வீதியில் கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திரும்பும் ஊர்வலம் ஜூலை 31ஆம் திகதி காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறகோட்டை கதிரேசன் கோவிலை சென்றடையவுள்ளது.
ஊர்வலப் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும், தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
