சிறப்பு கட்டுரை
ஒரு சிறிய நுளம்பு… ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை பறித்துவிடும். ஒரு சிறிய நீர்த்தேக்கம்… ஒரு முழு சமூகத்தையே ஆபத்தில் ஆழ்த்திவிடும். கண்களுக்கு தெரியாத அளவிலான ஒரு உயிரினம், ஒரு நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது என்றால் அது டெங்கு நுளம்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் ஆரம்பிக்கும் போது இலங்கையில் டெங்கு நோய் தொடர்பான எச்சரிக்கைகள் மீண்டும் மீண்டும் விடுக்கப்படுகின்றன. சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். உள்ளூராட்சி நிறுவனங்கள் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றன.
அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றது. இருந்தாலும், டெங்கு நோய் இன்னும் இலங்கையின் மிகப்பெரிய பொது சுகாதார சவால்களில் ஒன்றாகவே தொடர்கிறது.

டெங்கு என்பது இன்று வெறும் பருவகால நோயாக பார்க்க முடியாத நிலைக்கு வந்துள்ளது. காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல், திட்டமிடப்படாத கட்டிட வளர்ச்சிகள், கழிவு முகாமைத்துவ குறைபாடுகள் மற்றும் மக்கள் அலட்சியம் போன்ற பல காரணிகள் ஒன்றிணைந்து டெங்கு பரவலை தீவிரப்படுத்துகின்றன.
நோய் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதை விட, நோய் உருவாகும் சூழலை அழிப்பதே டெங்குவுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் நுளம்புகள் அழுக்கான நீரில் மட்டுமே பெருகும் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. உண்மையில், இந்த நுளம்புகள் சுத்தமான மற்றும் தேங்கி நிற்கும் சிறிய அளவிலான நீரிலும் கூட முட்டையிட்டு பெருகக்கூடியவை.
வீடுகளின் பின்புறங்களில் கிடக்கும் பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், வெற்று போத்தல்கள், பூந்தொட்டிகளின் அடிப்பகுதிகள், தேங்காய் மட்டைகள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் மழைநீர் தேங்கும் சிறிய குழிகள் போன்றவை டெங்கு நுளம்புகளின் முக்கிய இனப்பெருக்க இடங்களாக மாறுகின்றன.
இவ்வாறான இடங்களை அகற்றுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால், ‘இது ஒரு சிறிய விடயம்’ என்ற அலட்சியமான அணுகுமுறையே பின்னர் ஒரு பெரிய சுகாதார பிரச்சினையாக மாறுகின்றது. ஒரு வீட்டில் உருவாகும் நுளம்புகள் அருகிலுள்ள பல வீடுகளுக்கும் நோயை பரப்பக்கூடிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
டெங்கு நுளம்புகளின் இயல்பும் காலப்போக்கில் மாறி வருகின்றது. முன்னர் சுத்தமான நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் என கருதப்பட்ட நுளம்பு புழுக்கள் தற்போது பல்வேறு சூழல்களிலும் காணப்படுகின்றன. நீர் தொட்டிகளின் உட்பகுதி முதல் சில உவர்நீர் பகுதிகள் வரையிலும் அவை வாழக்கூடிய திறனை பெற்றுள்ளமை புதிய சவாலாக மாறியுள்ளது.
உலகளவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை, மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நீண்டகால ஈரப்பதமான சூழல் ஆகியவை ஏடிஸ் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன.
முன்னர் வெப்பமண்டல நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட டெங்கு தற்போது புதிய பிரதேசங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, கடந்த பல தசாப்தங்களில் உலகளவில் டெங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக டெங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத நகரமயமாக்கலும் டெங்கு பரவலுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வேகமாக வளர்ந்த நகரப் பகுதிகளில் நீர் தேங்கும் இடங்கள் அதிகரித்துள்ளதால் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கான சூழலும் அதிகரித்துள்ளது.
இலங்கையிலும் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

டெங்கு காரணமாக உயிரிழப்புகளும் பதிவாகி வருவதால், நோயின் தீவிரத்தன்மை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டிற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தலைமையில் நாடு முழுவதும் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டங்கள், நுளம்பு இனப்பெருக்க இடங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்கு வழங்கும் முக்கிய அறிவுறுத்தல் என்னவெனில், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தேங்கக்கூடிய எந்தவொரு பொருளையும் வைத்திருக்கக் கூடாது என்பதாகும். குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், தயிர் கப், தேங்காய் மட்டைகள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை முறையாக அகற்றுவது அவசியமாகும்.
மேலும், டெங்கு கட்டுப்பாட்டில் நுளம்பு புழுக்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. முட்டையிடும் பெண் ஏடிஸ் நுளம்புகளை ஈர்க்கும் வகையில் லார்வா ட்ராப் முறையை பயன்படுத்தி, பின்னர் அவற்றை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டெங்கு கட்டுப்பாட்டிற்காக அரசாங்கம் புதிய தொழில்நுட்ப முறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. 2020ஆம் ஆண்டு கொழும்பின் சில பகுதிகளில் வொல்பாசியா பாக்டீரியா முறையை பரிசோதனைத் திட்டமாக அறிமுகப்படுத்தியது. நுளம்புகளின் இனப்பெருக்க திறனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முறை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மட்டும் டெங்கு கட்டுப்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் முழுமையான வெற்றியை பெற முடியாது.
டெங்கு ஒழிப்பு என்பது சுகாதார அமைச்சின் அல்லது அரசாங்கத்தின் மட்டும் பொறுப்பு அல்ல. ஒவ்வொரு குடும்பமும் தமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும்.
வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை வீடு மற்றும் சுற்றுப்புறங்களை பரிசோதித்து நீர் தேங்கும் இடங்களை அகற்றுதல், நீர் தொட்டிகளை மூடி வைத்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற எளிய நடவடிக்கைகள் கூட ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்கக்கூடியவை.

விழிப்புணர்வு என்பது ஒரு வார நிகழ்ச்சி அல்ல் அது ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்கள், சுகாதார அதிகாரிகளின் முயற்சிகள் மற்றும் மக்களின் பொறுப்புணர்வு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால்தான் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும்.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் தாக்கத்தை முதலில் எதிர்கொள்வது சுகாதாரத்துறையாகும். நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் போது வைத்தியசாலைகளில் உள்ள படுக்கை வசதிகள், மருத்துவ வளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் சேவைகள் மீது அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்தில் சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால் சில நோயாளர்களுக்கு நோய் தீவிரமடைந்து இரத்தக்கசிவு, உடல் உறுப்புகள் பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது. இதனால் அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கும், அவசர சிகிச்சை வழங்குவதற்கும் சுகாதாரத்துறைக்கு மேலதிக பொறுப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக டெங்கு பரவல் அதிகரிக்கும் காலங்களில் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மேலதிக பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ச்சியான நோயாளி கண்காணிப்பு, இரத்தப் பரிசோதனைகள், அவசர சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் அதிக மனித வளத்தை கோருகின்றன.
மேலும், டெங்கு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சையை வழங்குவது சுகாதாரத்துறைக்கு முக்கியமான சவாலாக உள்ளது. பொதுமக்கள் பலர் காய்ச்சலை சாதாரண நோயாக கருதி தாமதமாக வைத்தியசாலைகளை நாடுவதால், சில சந்தர்ப்பங்களில் நோய் தீவிரமடையும் அபாயம் அதிகரிக்கிறது.
நோய் பரவலை கண்காணிப்பதற்கான தரவுகள், பிரதேச ரீதியான நோய் நிலைமைகள் மற்றும் நுளம்பு இனப்பெருக்கம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து பகுப்பாய்வு செய்வதும் சுகாதாரத்துறையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். துல்லியமான கண்காணிப்பு இல்லாமல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவது சவாலாக மாறக்கூடும்.
அதேவேளை, டெங்கு நோய்க்கான சிகிச்சையை வழங்குவது மட்டுமல்லாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் சுகாதாரத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், உள்ளூராட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் போன்ற பணிகளும் சுகாதார அதிகாரிகளின் பொறுப்புகளில் ஒன்றாகும்.
எனினும், டெங்கு போன்ற தொற்றுநோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதாகாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், நகர திட்டமிடல் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகிய துறைகளும் இணைந்து செயல்பட்டாலேயே நீண்டகால தீர்வை அடைய முடியும்.
ஒரு வீட்டின் அலட்சியம் ஒரு தெருவையே ஆபத்தில் ஆழ்த்தும். அதேவேளை, ஒரு குடும்பத்தின் விழிப்புணர்வு பல குடும்பங்களை பாதுகாக்கும்.
டெங்குவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் மருந்துகள் மட்டுமல்ல. தடுப்பு நடவடிக்கைகளும், மக்கள் பொறுப்புணர்வும் தான்.
இல்லையெனில், ஒவ்வொரு மழைக்காலமும் இலங்கைக்கு புதிய டெங்கு அச்சுறுத்தலாகவே தொடரும்.
செல்வசாமி டிக்னேஸ்வரன்
போடைஸ் டிக்கோயா
